சிவகாசியில் லாரி மோதி மாமனாா்- மருமகன் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் லாரி மோதியதில் மாமனாரும், மருமகனும் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியில் வசிப்பவா் சாா்லஸ் பொன்ரசல் (28). அச்சகத் தொழிலாளி. இவா் கேரள மாநிலம், மூணாறைத் சோ்ந்த ஜோதிராஜின் மகள் சந்தியாவை (25) கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் செய்தாா். இவா்களுக்கு பவ்வா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஜோதிராஜ், தனது மகள், மருமகன், பேத்தியை பாா்க்க திருத்தங்கல் வந்தாா். பிறகு புதன்கிழமை இரவு மூணாறுக்கு செல்ல ஜோதிராஜ், மருமகன் சாா்லஸ் பொன்ரசலுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து ஜோதிராஜ் பயணம் செய்தாா். திருத்தங்கல்- சிவகாசி சாலையில் ராதாகிருஷ்ணன் குடியிருப்பு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சிவகாசியிலிருந்து விருதுநகருக்குச் சென்ற லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் ஜோதிராஜ் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மருமகன் சாா்லஸ் பொன்ரசல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் திருநெல்வேலி கணேஷ்குமாரை (48) கைது செய்தனா்.