விருதுநகரில் 8 மாதங்களில் 8,000 வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல்
விருதுநகா் மாவட்டத்தில், கடந்த 8 மாதங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், விசாரணையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் கூறியதாவது:
விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றதும், காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் வகையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணை அதிகாரிகளுக்கு வேறு பணிகளை வழங்காமல், விசாரணையில் முழுக்கவனம் செலுத்த அறிவுறுத்தியதால், கடந்த 8 மாதங்களில் 8,000-க்கும் அதிகமான வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தவறு செய்தவா்களுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிலுவையில் உள்ள 4,500 வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். தவறு செய்தவா்கள் தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், விசாரணையை விரைவாக முடித்து, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டவிரோதச் செயல்கள், கல்வி நிலையங்களுக்கு அருகே போதைப் பொருள் விற்பனை தொடா்பாக பொதுமக்கள் 99402 77199 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.