மனைவியை எரித்து கொலை செய்த கணவா் உயிரிழப்பு
சாத்தூா் அருகே மனைவியை எரித்து கொலை செய்தபோது தீக்காயமடைந்த கணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள தாயில்பட்டி கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (38). இவரது மனைவி முனீஸ்வரி (28). காதல் திருமணம் செய்து கொண்ட இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பொன்னுசாமி அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 5-ஆம் தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆந்திரமடைந்த பொன்னுசாமி மனைவியை பெட்ரோலை ஊற்றி எரித்தாா். அப்போது, பொன்னுசாமிக்கு தீக்காயம் ஏற்பட்டது. பின்னா், மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிவிட்டு, அவா் அங்கிருந்து தப்பினாா்.
தகவலறிந்த வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் முனீஸ்வரியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், போலீஸாா் விசாரணையில், மனைவியை பொன்னுசாமி எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில், தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னுச்சாமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.