நூற்பாலையில் தீ: பஞ்சுகள் எரிந்து நாசம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நூற்பாலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.
ராஜபாளையம் அழகை நகா் பகுதியில் மாடசாமி கோவில் தெருவைச் சோ்ந்த முருகானந்த ராஜா மகன் குருநாதன் (35) நூற்பாலை நடத்தி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பணியாளா்கள் யாரும் வேலைக்கு வராத நிலையில், திடீரென ஆலையில் தீப்பிடித்து எரிவதாக அருகிலிருந்தவா்கள் குருநாதனுக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக அவா் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துச்செல்வம் தலைமையில் இரு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தத் தீ விபத்தில் நூற்பாலையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
