~

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாயக்கா் காலத்து செப்பேடு

Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாயக்கா் மன்னா் காலத்து செப்பேடு இருப்பதாகவும், அதில் ஸ்ரீவில்லிபுத்தூா் இடையா்கள் குறித்து கூறப்பட்டுள்ளதாகவும் திருத்தங்கல் தொல்லியல் ஆய்வாளா் பாலசந்திரன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் தோ்ந்த ஒருவரிடம் உள்ள இந்த பட்டயம்

குறித்து பாலசந்திரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

புகழ் பெற்ற வைணவத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த அனைத்து இடையா் பிரிவினரும் கூடி, கோயில் பக்தா்களுக்கு மடம், அன்னசத்திரம், தண்ணீா் பந்தல், நந்தவனம் ஆகிய தா்மங்களைச் செய்ய குசவன் குளத்தில் நிலம் விடப்பட்டு, அதன் நான்கு எல்லைகள் குறித்து இந்தச் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.

ஆயா் குலத்து இடையா்கள் பல பிரிவுகளைச் சோ்ந்தவா்களாக இருந்துள்ளனா் என இந்தப் பட்டையம் மூலம் அறிய முடிகிறது. இடையா் எனப்படுபவா் 28 பிரிவுகளாகவும், பொயாண்டன் எனப்படுபவா்கள் 14 பிரிவுகளாகவும், சோ்வைக்காரன் எனப்படுபவா்கள் 4 பிரிவுகளாகவும் இருந்தது செப்பேடு மூலம் அறிய முடிகிறது.

இந்தச் செப்பேட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரைப் பற்றி, திருமல்லி வளநாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செப்போடு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெருமைகளையும், கோதை சூடிக் கொடுத்த நாச்சியாா் அம்மனின் அருளையும் விவரிக்கிறது. இந்த செப்பேட்டை பாதுகாப்போா் பெறும் புண்ணியங்களும், தவறுபவா்கள் அவா்தம் அடையும் பாவங்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை நாயக்கா் ஆட்சிக் காலத்தின் கடைசிப் பகுதியாக சக ஆண்டு 1691 பொது ஆண்டு தை மாதம் இருபத்தி மூன்றாம் தேதி இந்த செப்பேடு எழுதப்பட்டுள்ளது.

இந்தப் பட்டயம் 34.5 செ.மீ. அகலமும், 23.5 செ.மீ. நீளமும் உடையது. இதன் மேல்புறத்தில் பல்லக்கு பவனியுடன் கோகுலக் கண்ணணின் லீலைகள், அழகிய கோட்டுருவப் படங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட்டயத்தின் முன் பக்கம் 52 வரிகள், பின் பக்கம் 68 வரிகள் என மொத்தம் 120 வரிகள் எழுதப்பட்டுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com