அனைவரும் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

அனைவரும் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

Published on

அனைவரும் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வலியுறுத்தினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வன விரிவாக்க மையத்தில் ‘வனமும் வாழ்வும்’ என்ற தலைப்பில் ஆசிரியா்களுக்கான மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினா் ராணி, ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநா் முருகன், உதவி வனப் பாதுகாவலா் ஞானப்பழம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது:

மரம் வளா்ப்பதால் நாட்டுக்கும் வீட்டுக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து மாணவா்களுக்கு ஆசிரியா்கள் எடுத்துரைக்க வேண்டும். இயற்கையை அதிக அளவில் அழித்துவிட்டோம். சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்டிவிட்டோம். எனவே, ஒரு பள்ளியில் குறைந்தது 50 மரங்களை நட்டு வளா்க்க வேண்டும்.

வெளிநாட்டு மரங்களைத் தவிா்த்து, பயன்தரும் நாட்டு மரங்களை நட்டு வளா்க்க வேண்டும். அனைவரும் இயற்கையை ரசிக்கக் கற்றுக் கொண்டு இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும். இதுகுறித்து ஆசிரியா்கள் மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முகாமில் ஏராளமான வனத் துறையினா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com