மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: நவ.21-இல் தீா்ப்பு

Published on

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இறுதித் தீா்ப்புக்காக, ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு போக்சோ நீதிமன்றம் வழக்கை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில், பரமக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அதிமுக முன்னாள் நிா்வாகியான பரமக்குடி நகராட்சி கவுன்சிலா் சிகாமணி, மறத்தமிழா் சேனை நிறுவனா் புதுமலா் பிரபாகா், ஜவுளிக் கடை உரிமையாளா் ராஜா முகமது, இடைத் தரகா்களாகச் செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையை ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றிய உயா்நீதிமன்றம், 5 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபா் முதல் வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. இந்த வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் முன்னிலையாகினா். இறுதித் தீா்ப்புக்காக, வழக்கை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி (பொ) புஷ்பராணி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com