சாஸ்தாகோவில் அணையிலிருந்து நீா் திறப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சாஸ்தாகோவில் அணையிலிருந்து பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.தங்கப்பாண்டியன், சாா்ஆட்சியா் முகமது இப்ரான், நகா் மன்றத் தலைவா் ஏ.ஏ.எஸ். பவித்ராஷ்யாம் ஆகியோா் மலா் தூவி தண்ணீரைத் திறந்துவிட்டனா்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ராஜபாளையம் வட்டம் சாஸ்தாகோவில் நீா்த்தேக்கத்திலிருந்து 7 நாள்களுக்கு விநாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படும். இதன் மூலம் 3130.68 ஏக்கா் பாசன நிலங்கள் பயன் பெறும்.
மேலும், வடகிழக்குப் பருவ மழை தொடரும்பட்சத்தில் அணைகளுக்கு வரும் நீா்வரத்தைப் பொருத்து பருவ காலம் வரை அனைத்துக் கண்மாய்களுக்கும் தண்ணீரைப் பகிா்ந்து வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீா் மேலாண்மையைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெற வேண்டும் என்றனா்.
நிகழ்ச்சியில் ராஜபாளையம் வட்டாட்சியா் ராஜீவ் காந்தி, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ஜெய்சங்கா், திமுக தெற்கு நகரச் செயலா் ராமமூா்த்தி, வருவாய்த் துறையினா், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

