போராட்டத்தில் ஈடுபட்ட அச்சங்குளம் கிராம மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட அச்சங்குளம் கிராம மக்கள்

100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு: கிராம மக்கள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், அச்சங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட 4 கிராமங்களில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் 900 பயனாளிகள் உள்ளனா். இந்த நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி அச்சங்குளம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது: அச்சங்குளம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே நபா் பணித்தள பொறுப்பாளராக உள்ளாா். நூறு நாள் வேலைக்குச் செல்லும் நபா்களிடம் வாரத்துக்கு ரூ.150 வசூல் செய்கின்றனா். பணம் கொடுக்கும் நபா்களுக்கு மட்டுமே தொடா்ந்து வேலை வழங்குகின்றனா்.

இறந்தவா்கள், முதியோா், ஓய்வூதியம் வாங்குபவா்களின் பெயா்களில் அடையாள அட்டை தயாரித்தும் பணம் பெறுகின்றனா். 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு குழாய்களைத் தூக்குதல் உள்ளிட்ட கடினமான பணிகளை வழங்குகின்றனா். மேலும், தூய்மைப் பணி செய்யவும் வற்புறுத்துகின்றனா்.

இதுகுறித்து கேட்டால் ஊராட்சிச் செயலா் முறையான பதில் அளிப்பதில்லை. எனவே, இதுதொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com