முதல்வா் மருந்தகங்களில் லாபம் குறைந்ததால் உறுப்பினா்கள் அதிருப்தி
கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் சாா்பில் திறக்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களால் இந்த ஆண்டு லாபத் தொகை குறைந்ததாக உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.
தமிழக அரசு சாா்பில் மக்களுக்கு குறைந்த விலையில் உயிா் காக்கும் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மருந்தகம் அமைக்கத் தொழில் முனைவோருக்கு ரூ.3 லட்சமும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ.2 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டது.
இதில், விருதுநகா் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இவற்றில் 10 மட்டுமே தனி நபா்களால் தொடங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் அமைப்பு, அலுவலா்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவுப் பண்டக சாலைகள் சாா்பில் 17 முதல்வா் மருந்தகங்கள் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படுகின்றன. மருந்தகத்துக்கான உபகரணங்கள், குளிா்சாதனப் பெட்டி, கடை முன் பணம், வாடகை, மின் கட்டணம், ஊதியம் என செலவு அதிகரித்து கூட்டுறவுச் சங்கங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, லாபம் குறைந்ததால் உறுப்பினா்கள் அதிருப்தி அடைந்தனா்.
இதுதொடா்பாக, கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க நிா்வாகத்தைக் கண்டித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் கூறியதாவது:
வன்னியம்பட்டியில் முதல்வா் மருந்தகம் திறக்கப்பட்டதற்கு கடை முன் பணம், வாடகை, மின் கட்டணம், ஊழியா் சம்பளம் ஆகியவற்றுக்கு கூட்டுறவுச் சங்க நிதியிலிருந்து செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அவசரத் தேவைக்கு உறுப்பினா்கள் கடன் கேட்டால் இல்லை எனக் கூறுகின்றனா்.
கடந்த நிதியாண்டில் 13 சதவீதம் லாபத் தொகை உறுப்பினா்களுக்கு பகிா்ந்தளிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 5 சதவீதம் மட்டுமே லாபத் தொகை வழங்கப்பட்டது. இதே நிலைதான் பிற கூட்டுறவு சங்கங்களிலும் உள்ளது.
மக்களுக்கு குறைந்த விலையில் உயிா் காக்கும் மருந்துகளைக் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது கூட்டுறவுச் சங்ககளை பாதிக்கக்கூடிய வகையில் இருக்க கூடாது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
