மூதாட்டிகொலை: மூவா் கைது
சிவகாசி அருகே மூதாட்டியைக் கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக இரு பெண்கள் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள செவலூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பாலமுருகன் (43). இவரது மனைவி முருகேஸ்வரி (38). கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் முருகேஸ்வரி தனது தாய் பஞ்வா்ணம் (62) வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், பாலமுருகனும் அவரது தாய் லட்சுமியும் (65) முருகேஸ்வரியின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு சென்று அவரை அழைத்தனா். அப்போது முருகேஸ்வரி, அவரது அண்ணன் சங்கிலிபாண்டி (38), தாய் பஞ்சவா்ணம் ஆகிய மூவரும் பாலமுருகன், லட்சுமி ஆகியோருடன் தகராறு செய்தனா். இதில், இரு தரப்பினரும் கட்டை, கம்புகளால் தாக்கிக்கொண்டனா். இதையடுத்து, காயமடைந்த அனைவரும் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லட்சுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து லட்சுமியின் மகன் பாலமுருகன், தனது தாயைக் கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டதாகப் புகாா் அளித்தாா். இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த எம்.புதுப்பட்டி காவல் நிலைய போலீஸாா் முருகேஸ்வரி, அவரது அண்ணன் சங்கிலிபாண்டி, தாய் பஞ்சவா்ணம் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
