தொடா் மழையால் பிளவக்கல் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக பிளவக்கல் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய்க் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி 7,219 ஏக்கா் விவசாய நிலங்களும், பெரியாறு நேரடி கால்வாய் மூலம் 960 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் 41 அடியை எட்டியதைத் தொடா்ந்து, பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்துக்கு வினாடிக்கு 3 கன அடி வீதம் 108 நாள்களுக்கும், கண்மாய் பாசனத்துக்கு 150 கன அடி வீதம் 7 நாள்களுக்கும் தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டது.
கடந்த 17-ஆம் தேதி அமைச்சா் சாத்தூா் ராமசந்திரன் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவைத்தாா். 7 நாள்கள் ஆன நிலையில் 14 கண்மாய்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.
இந்த நிலையில், நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பிளவக்கல் அணைக்கு வினாடிக்கு 300 கன அடி தண்ணீா் வருவதால் அணையின் நீா்மட்டம் 36 அடியாக உள்ளது. இதனால், கண்மாய் பாசனத்துக்கு திங்கள்கிழமை 8-ஆவது நாளாக வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
மழைப்பொழிவைப் பொறுத்து அடுத்த சில நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் என நீா்வளத் துறையினா் தெரிவித்துள்ளதால் கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
