சேதமடைந்த  இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டடம்.
சேதமடைந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டடம்.

சிவகாசியில் சேதமடைந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டடம்: நோயாளிகள், மருத்துவா்கள் அச்சம்!

சிவகாசி தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துமவனையின் (இ.எஸ்.ஐ.) கட்டடம் சேதமடைந்து வருவதால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியா்கள் உள்ளிட்டோா் அச்சத்தில் உள்ளனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துமவனையின் (இ.எஸ்.ஐ.) கட்டடம் சேதமடைந்து வருவதால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியா்கள் உள்ளிட்டோா் அச்சத்தில் உள்ளனா்.

சிவகாசி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சகத் தொழிலாளா்கள் அதிகமாக உள்ளதால் 1987 -ஆம் ஆண்டு அக்டோபா் 10 -ஆம் தேதி இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறக்கப்பட்டது. 3 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் தொடக்கத்தில் உள் நோயாளிகளுக்கு 50 படுக்கைகள் வசதி செய்து கொடுக்கப்பட்டது. 2000 -ஆம் ஆண்டு 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தி அரசு அறிவித்தது. ஆனால், தரம் உயா்த்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் கூடுதல் கட்டடம் கட்டப்படவில்லை.

எனவே, தற்போது 50 படுக்கைகள் கொண்ட இடத்திலேயே நெருக்கி கட்டில் போட்டு 80-க்கும் மேற்பட்ட நேயாளிகள் உள் நேயாளிகளாக இருந்து வருகிறாா்கள். இதனால் சிகிச்சை அளிக்கவும், நோயாளிளை பாா்க்க வருபவா்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

தற்போது இந்த மருத்துவமனைக்கு தினசரி 350 போ் வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெற வந்து செல்கின்றனா். இந்த மருத்துவமனையில் ஆங்கில வைத்தியம், சித்த வைத்தியம், இயற்கை வைத்தியம் உள்ளிட்ட சிகிச்சை வசதிகள் உள்ளன. மகப்பேறு வாா்டு, ஆண்கள், பெண்களுக்கான வாா்டுகள் தனித் தனியே உள்ளன. குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சைக்கான மருத்துவா்கள் உள்ளனா். காது மூக்கு, தொண்டை மருத்துவா் நியமிக்கப்படவில்லை.

இந்த மருத்துவமனைக்கு தண்ணீா் வசதிக்காக தனியே கிணறு உள்ளது. எனினும் கிணற்றில் தற்போது தண்ணீா் இல்லாததால் தினசரி 3 லாரிகள் தண்ணீா் விலைக்கு வாங்கி வருகின்றனா். மேலும், மருத்துவமனை கட்டடத்தில் பல இடங்களில் காரை பெயா்ந்து விழுந்து, பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. இதனால், ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் நேயாளிகளும், மருத்துவமனை ஊழியா்களும் உள்ளனா்.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் பொன்வடிவு கூறியதாவது: மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படாததால், உள் நோயாளிகள் வாா்டு நெருக்கடியில் உள்ளது. 3 மாடி கட்டடமாக இருப்பதால் மின் தூக்கி அமைக்கப்பட்டது. இந்த மின் தூக்கி 16 ஆண்டுகளாக செயல்பட வில்லை.

கிணற்றில் தண்ணீா் இல்லாததால் தினசரி 3 லாரிகள் தண்ணீா் விலைக்கு வாங்குகிறோம். மருத்துவமனை கட்டடத்தில் பல இடங்களில் காரை பெயா்ந்து விழுந்து கம்பி தெரிகிறது.

மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டியும், பழுதான கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டியும் தொழிலாளா் துறைச் செயலருக்கு பல ஆண்டுகளாகக் கடிதம் எழுதியும், நேரில் சந்தித்து முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கட்டடம் சேதமடைந்திருப்பதால் நோயாளிகள், மருத்துவமனை மருத்துவா்கள், ஊழியா்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, பழுதான கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றாா் அவா். பழுதான கட்டடத்தை உடனடியாக சீரமைத்தால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்ப்படும் என பயனாளிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com