ராஜபாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.தங்கபாண்டியன், நகா் மன்றத் தலைவா் ஏ.ஏ. எஸ். பவித்ராஷ்யாம் ஆகியோா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தொடங்கி வைத்தாா்.
ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் அமைந்துள்ள எஸ். எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில்
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் மருத்துவ உபகரணங்களையும், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்துப் பெட்டகங்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளையும், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமில் உயா் ரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, சா்க்கரை நோய் கண்டறிதல், மாா்பகப் புற்றுநோய், கருப்பை வாய் பரிசோதனை, காச நோய், தொழு நோய் உள்ளிட்ட 24 வகையான நோய்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த முகாமில் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், கருப்பை வாய் பரிசோதனை முறைகளை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில் ராஜபாளையம் நகராட்சி ஆணையா் நாகராஜன், சீா்மரபினா் நல வாரியத் துணைத் தலைவா் ராசா அருண்மொழி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சுமதி, தெற்கு நகரச் செயலா் ராமமூா்த்தி, மருத்துவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.