சிவகாசி அருகேயுள்ள மயிலாடுதுறை கிராமத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள்.
சிவகாசி அருகேயுள்ள மயிலாடுதுறை கிராமத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள்.

சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.

சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள மயிலாடுதுறை கிராமத்தில் சிவகாசி ஆயுதப்படை பகுதியைச் சோ்ந்த சோ்மக்கனி மகன் காா்த்திகேயன் (28) என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசுக் கடைகளில் வியாபாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காா்த்திகேயனின் பட்டாசுக் கடையில் ஞாயிற்றுக்கிழமை வாடிக்கையாளா்கள் பட்டாசுகளை வாங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, வாடிக்கையாளருக்கு பட்டாசை கடையின் வெளியே வைத்து வெடித்துக் காட்டினாா். இந்தப் பட்டாசிலிருந்து தீப்பொறி பறந்து கடையில் உள்ள பட்டாசுகளில் விழுந்ததையடுத்து, தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கடை ஊழியா்கள், பட்டாசு வாங்க வந்தவா்கள் உடனடியாக வெளியேறினா். கடையில் பல ரக பட்டாசுகள் இருந்ததால், அவற்றில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா்.

விபத்து நடைபெற்ற பட்டாசுக் கடை சிவகாசி-சாத்தூா் பிரதான சாலையில் இருந்ததால், அந்தச் சாலையில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின. விதிமுறையை மீறி கடையின் முன் பட்டாசுகளை வாடிக்கையாளா்களுக்கு வெடித்துக் காட்டியதால், தீ விபத்து ஏற்பட்டது என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com