பணம் திருட்டு: இளைஞா் கைது
ராஜபாளையம் அருகே தனியாா் நிறுவனத்தில் பணம் திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி புதுத்தெருவைச் சோ்ந்த பழனிசெல்வம் மகன் பழனிகணேசன் (45). இவா் அதே பகுதியில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இரவில் நிறுவனத்தை பூட்டிச் சென்ற அவா் மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி கணேசன் கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் இளைஞா் ஒருவா் சுவா் ஏறி குதித்து தப்பிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில், அவா் அய்யனாபுரத்தைச் சோ்ந்த பாண்டியன் (30) எனத் தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.45 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.