ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பாரதி நகரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் ஐயப்பன் (44). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்த இவா், செவ்வாயக்கிழமை ராஜபாளையத்திலிருந்து சேத்தூருக்கு ஆட்டோவில் ஆட்களை ஏற்றிக் கொண்டு ராஜபாளையம்-தென்காசி சாலையில் சென்றாா். அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, எதிரே அரிசி பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் இவரது ஆட்டோ மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், ஆட்டோவிலிருந்த மூவா் காயமடைந்தனா். இவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ராஜபாளையம் போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநரான சேத்தூா் ஜீவா நகரைச் சோ்ந்த மாரிமுத்து (41) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த ஐயப்பனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.