கல்லூரியில் அஞ்சல் துறை விழிப்புணா்வுக் கண்காட்சி
விருதுநகா் மாவட்டம், சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் அஞ்சல் துறை குறித்த விழிப்புணா்வுக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தாா். கண்காட்சியை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தொடங்கி வைத்தாா்.
இதில் தென் மண்டல அஞ்சல் துறை இயக்குநா் பி.ஆறுமுகம் கலந்துகொண்டு அஞ்சல் துறையின் செயல்பாடுகள் குறித்தும், அதன் சேவைகள் குறித்தும் பேசினாா்.
அஞ்சல் தலைகள் கண்காட்சி அரங்கை விருதுநகா் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் பி.சுசீலா திறந்து வைத்தாா். இதில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தற்போது வரையிலான சிறந்த அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா். கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுா்கன் , மேகமலை புலிகள் காப்பக கள இயக்குநா் எஸ்.அனந்த் , விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் கண்காட்சி வருகிற 10 -ஆம் தேதி (சனிக்கிழமை) நிறைவு பெறும்.