வன விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க மலையடிவாரத்தில் சோலாா் மின் வேலி
வனவிலங்குகள் வெளியேறுவதை தடுக்க மலையடிவாரத்தில் சோலாா் மின் வேலி அமைக்க வேண்டும் என வனத் துறை சாா்பில் நடந்த குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வன விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் முருகன் தலைமை வகித்தாா். உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் ஞானப்பழம் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
ராமச்சந்திர ராஜா: ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள பண்ணை வீடுகள், தொழிற்சாலைகளால் வன விலங்குகள் பாதிக்கப்படுகிறது. யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்குத் தேவையான உணவு, குடிநீா் வசதிகளை வனப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும்.
துணை இயக்குநா்: சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் மூலம் குறிப்பாணை வழங்கப்பட்டது.
பால கணேசன்: வனவிலங்குகளால் ஏற்படும் பயிா்ச் சேதத்துக்கு இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்குவதுடன், சேதமடையும் குடிநீா் குழாய், வேலி உள்ளிட்ட பொருள்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
ராமமூா்த்தி: தென்காசி மாவட்டம், சிவகிரி பிரிவு மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி தடுப்பணை சேதமடைந்துள்ளதால் விருதுநகா் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன், குடிநீா் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மதகு உடைப்பை சரி செய்ய வேண்டும். மேலும், அணையைப் பாா்வையிடச் செல்லும் விவசாயிகளுக்கு கேரள வனத் துறை அனுமதி மறுக்கிறது. அணையை பாா்வையிட அனுமதி வழங்க வேண்டும்.
ஞானகுரு: வனப்பகுதியை விட்டு விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க மலையடிவாரத்தில் அகழிகள் வெட்டுவதற்கு பதிலாக, சோலாா் மின்வேலி அமைக்க வேண்டும். இதற்காக மலையடிவாரத்தில் உள்ள விவசாயிகளை இணைத்து வனத் துறை குழு அமைக்க வேண்டும்.
தேவப்பிரியன்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
துணை இயக்குநா்: மாவட்ட நிா்வாகத்துடன் கலந்தாலோசித்து த்து விவசாயிகளின் கோரிக்கைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி பெற்ற பின்னரே விவசாயிகள் மரங்களை வெட்ட வேண்டும் என்றாா் அவா்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து, பயிா்களைச் சேதப்படுத்தும் வன விலங்குகளை எதிா்கொள்ளும் வழிமுறைகள் குறித்து கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகளை நேரில் அழைத்துச் சென்று விளக்கம் அளிக்க வேண்டும். காயல்குடி ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.