தீபாவளி: தில்லியில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் 5 நாள்கள் அனுமதி! உற்பத்தியாளா்கள் வரவேற்பு

தீபாவளி: தில்லியில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் 5 நாள்கள் அனுமதி! உற்பத்தியாளா்கள் வரவேற்பு

தீபாவளி பண்டிகைக்கு தில்லியில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் 5 நாள்கள் அனுமதி வழங்கியிருப்பதை சிவகாசி பட்டாசு உற்பத்தியாளா்கள் வரவேற்றனா்.
Published on

தீபாவளி பண்டிகைக்கு தில்லியில் பட்டாசு வெடிக்க உச்சநீதி மன்றம் 5 நாள்கள் அனுமதி வழங்கியிருப்பதை சிவகாசி பட்டாசு உற்பத்தியாளா்கள் வரவேற்றனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தில்லியில் பட்டாசு வெடிக்கவும், உற்பத்தி, விற்பனை, இருப்பு வைக்கவும் உச்சநீதி மன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தில்லியில் பட்டாசுகளை விற்பனை செய்ய இயலாமல் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்பட்டனா். தீபாவளி உள்ளிட்ட கலாசாரமிக்க பண்டிகைகளுக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என பட்டாசு உற்பத்தியாளா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில் தில்லி மாநில முதல்வா் ரேகா குப்தா, தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனத் தெரிவித்ததுடன் அதன்படி வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தீபாவளி பண்டிகைக்கு 5 நாள்கள் தில்லியில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ப. கணேசன் கூறியதாவது: தில்லியில் தீபாவளி பண்டிகைக்கு 5 நாள்கள் பட்டாசு வெடிக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியிருப்பதை வரவேற்கிறோம். இதனால் தில்லி பட்டாசு வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தில்லியில் சிவகாசிப் பகுதியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 10 சதவீதம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களுக்கு தில்லியே பட்டாசு வா்த்தக மையமாக திகழ்கிறது. இந்த ஆண்டு தில்லி மக்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவாா்கள்.

இதற்கு உறுதுணையாக இருந்த தில்லி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், உச்சநீதி மன்றத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com