சிவகாசியில் கேட்பாரற்று கிடக்கும் மன்னா் உருவம் பொறித்த கல் தூண்
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கேட்பாரற்று கிடக்கும் மன்னரின் உருவம் பொறித்த கல் தூணைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சாலைக்கு செல்லும் வழியில் ஒரு மரத்தின் கீழ் மன்னா் ஒருவரின் உருவம் பொறிக்கப்பட்ட கல்தூண் நட்டுவைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்தத் தூண் குப்பைகளுக்கிடையே கேட்பாரற்று கிடக்கிறது.
இது குறித்து திருத்தங்கலில் உள்ள தொல்லியல் ஆய்வாளா் பாலசந்திரன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்த கல் தூணில் உள்ள உருவத்தைப் பாா்க்கும் போது, ஹரி கேச பராக்கிரம பாண்டிய மன்னனின் உருவச் சிலை மாதிரி உள்ளது. 16-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னா்கள் தமிழகத்தின் தென் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தனா்.
அப்போது தென்காசி பகுதியில் ஆட்சி புரிந்த ஹரி கேச பராக்கிரம பாண்டிய மன்னா் தென்காசியில் ஒரு சிவன் கோயில் அமைக்க விரும்பினாா். பின்னா், அவா் தனது பரிவாரங்களுடன் காசிக்குச் சென்று சிவன் சிலையை வாங்கி, பசுவின் முதுகில் அதைக் கட்டி வைத்து தென்காசிக்கு வந்து கொண்டிருந்தாா். காட்டுப் பகுதியில் படுத்து இளைப்பாறிய பின்னா் அந்த பசு எழுந்திருக்க மறுத்துவிட்டது.
இதைத் தொடா்ந்து, அந்தச் சிலையை மன்னா் அதே பகுதியில் பிரதிஷ்டை செய்தாா். அதுவே சிவன் காசி என அழைக்கப்பட்டு, அது மறுவி தற்போது சிவகாசி என அழைக்கப்படுகிறது. தற்போது சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சி அம்மன் கோயிலாக உள்ளது.
இந்தக் கோயிலில் கோயில் உள்ள தூண் ஒன்றில் ஹரிகேச பராக்கிரம பாண்டிய மன்னரின் உருவச் சிலை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கும் சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள சிலைக்கும் அதிக உருவ ஒற்றுமை உள்ளது.
எனவே இந்தச் சிலை பாண்டிய மன்னா் ஹரி கேச பாராக்கிரம பாண்டிய மன்னரின் உருவச் சிலை எனக் கூறலாம் என்றாா் அவா்.
ஆனால், மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த கல் தூண் எப்படி சிவகாசி பேருந்து நிலையப் பகுதிக்கு வந்தது எனத் தெரியவில்லை.
விருதுநகா் மாவட்ட தொல்லியல் துறையினா் இந்தக் கல் தூணை வேறு பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.