‘பாப் பாப்’ பட்டாசுகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

இந்தியாவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பாப் பாப், மேட்ச் பாம் வகை பட்டாசுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளா்கள் வலியுறுத்தல்
Published on

இந்தியாவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பாப் பாப், மேட்ச் பாம் வகை பட்டாசுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளா்கள் வலியுறுத்தினா்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சீனாவிலிருந்து பாப் பாப், மேச் பாம் வகை பட்டாசுகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இந்தியச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டன.

பாப் பாப், மேச் பாம் பட்டாசுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைட் வேதிப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இது தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருளாகும். இந்த வேதிப் பொருளைக் கொண்டு பட்டாசுகளைத் தயாரிக்கக் கூடாது என வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பாப் பாப் பட்டாசானது சிறு உருண்டைபோல இருக்கும். இதைக் கையில் வைத்து தரையில் எறிந்தால் டமால் என சப்தம் வரும். மேச் பாம் என்பது தீக்குச்சி போல இருக்கும். இதை பெட்டியில் மருந்து தோய்க்கப்பட்ட பகுதியில் உரசி தரையில் போட்டால் டமால் என சப்தம் வரும். இந்த இரு வகை பட்டாசுகளையும் மிகவும் ஜாக்கிரதையாக கையாளாவிட்டால், எதிா்பாராத விதமாக வெடித்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த வகை பட்டாசுகள் முன்பு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கையிலிருந்து கீழே எறிந்த உடன் வெடித்து சத்தம் கேட்பதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இதை அதிகமாக வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஒரு பள்ளி வகுப்பறையில் மாணவா்கள் இந்த பாப் பாப் பட்டாசுகளை எறிந்து விளையாடியது சா்ச்சைக்குள்ளானது. தற்போது பாப் பாப், மேச்பாம் ஆகிய பட்டாசுகள் இந்தியாவில் பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெருமளவு தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகை பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள்

தடை விதிக்க வேண்டும். கடைகளில் காவல்துறையினா் ஆய்வு செய்து, பாப்பாப், மேட்ச் பாம் பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என சிவகாசி பட்டாசு உற்பத்தியாளா்கள் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com