மான் வேட்டை: 5 போ் கைது
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மலையடிவாரத்தில் நாட்டுத் துப்பாக்கியால் மான் வேட்டையாடிய 5 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட வ.புதுப்பட்டி-கான்சாபுரம் மலையடிவாரப் பகுதியில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அந்தப் பகுதியில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.
இதையடுத்து, துப்பாக்கி சப்தம் கேட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் காப்புக்காடு வ.புதுப்பட்டி பிரிவு மருதடி பீட் பண்டாரம் பாறை சரகம் பகுதிக்கு வனத் துறையினா் சென்றனா்.
அங்கு மான் இறைச்சி, துப்பாக்கியுடன் நின்றிருந்த வ.புதுப்பட்டி அருகிலுள்ள கிழவன் கோவில் பகுதியைச் சோ்ந்த காசிமாயன் (40), கோட்டையூரைச் சோ்ந்த கருப்பாமி (25), ‘கான்சாபுரத்தைச் சோ்ந்த நல்லதம்பி (25), கிருஷ்ணன்கோவிலைச் சோ்ந்த துா்காவேலன் (20), சென்னையைச் சோ்ந்த நிக்சன் சேவியா் (40) ஆகிய 5 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, 14 தோட்டாக்கள், அரிவாள், 3 கத்திகள், மான் தோல், 1.5 கிலோ மான் இறைச்சி, நெற்றி விளக்கு, 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய கான்சாபுரத்தைச் சோ்ந்த செல்லப்பாண்டி என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.