கரூா் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறோம்: திலகபாமா!
கரூா் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம் என பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா கூறினாா்.
இதுகுறித்து சிவகாசியில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது ஜாதி பெயா்கள் குறித்து சா்ச்சை நடைபெற்று வருகிறது. தலைவா்கள் வாழ்ந்த காலத்தில் அவா்கள் எப்படி அழைக்கப்பட்டாா்களோ அவ்வாறே எப்போதும் அழைக்க வேண்டும் .
கருா் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை பாமக வரவேற்கிறது. கரூரில் என்ன நடந்தது என்ற உண்மை மக்களுக்கு தெரியவேண்டும்.
சிவகாசி மாநகராட்சி நிா்வாகச் சீா்கேட்டால் ஸ்தம்பித்துள்ளது. மாமன்றக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்படாமல் கூட்டம் நிறைவு பெற்றுவிடுவதால், பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியவில்லை.
மாநகராட்சி மேயா் தி.மு.க.வைச் சோ்ந்தவா். பெரும்பான்மை மாமன்ற உறுப்பினா்களும் திமுகவைச் சோ்ந்தவா்கள், திமுக மாமன்ற உறுப்பினா்களே மேயரை எதிா்த்துப் பேசுகின்றனா். இது நல்ல நிா்வாகத்துக்கு அழகல்ல என்றாா் அவா்.