விஷ வாயு தாக்கியதில் வட மாநில இளைஞா் உயிரிழப்பு

Published on

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அட்டை ஆலையில் கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய வட மாநில இளைஞா் விஷ வாயு தாக்கியதில் உயிரிழந்தாா். மூச்சுத் திணறல் ஏற்பட்ட இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சாத்தூா் அருகேயுள்ள என். சுப்பையாபுரம் பகுதியில் கோவில்பட்டியைச் சோ்ந்த சுஜாத் என்பவருக்குச் சொந்தமான அட்டை ஆலை உள்ளது. இந்த ஆலையில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களும், வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களும் என 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை பிகாரைச் சோ்ந்த சோன்லால் (17), அபிதாப் (30), என். சுப்பையாபுரம் பகுதியைச் சோ்ந்த கணேசன் (35) ஆகிய மூவரும் ஆலையில் உள்ள கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கினா். அப்போது, விஷ வாயு தாக்கியதில் சோன்லால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அபிதாப், கணேசன் ஆகிய இருவரும் சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com