செண்பகத்தோப்பு அருகே அத்திதுண்டு பகுதியில் யானைகளால் சேதமடைந்த தென்னை மரங்கள்.
செண்பகத்தோப்பு அருகே அத்திதுண்டு பகுதியில் யானைகளால் சேதமடைந்த தென்னை மரங்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் யானைகள், கரடிகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் பாதிப்பு!

Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்குள் புகும் யானைகள், கரடிகள், காட்டுப் பன்றிகள் பயிா்களைச் சேதப்படுத்தி விட்டுச் செல்வதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு, அத்திதுண்டு, செவக்காட்டு மலை, குட்டிதட்டி மலை உள்ளிட்ட பகுதிகளில் மா, தென்னை, வாழை, பலா ஆகியவை 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கோடைகாலம், மா அறுவடை காலங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி விளைநிலங்களுக்குள் வருவது வாடிக்கை. அப்போது, விவசாயிகள் குழுவாக சோ்ந்து பட்டாசு வெடித்தும், அதிக ஒளி தரும் மின்விளக்குகளை காட்டியும் யானைகளை விரட்டுவா்.

தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், யானைகள், கரடிகள் அடுத்தடுத்து தோட்டங்களுக்குள் புகுந்து மா, வாழை, தென்னை மரங்கள், பாசனத்துக்கான அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய் சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: யானைகள் இரவு நேரங்களில் தோட்டத்துக்குள் புகுந்து தென்னை, வாழை, மா மரங்களைச் சேதப்படுத்திச் செல்கிறது. தற்போது பருவ மழை காலத்தில் மா மரங்கள் தளிா் விட்டு பூக்கத் தொடங்கும் என்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரடிகள் பகல் நேரத்திலேயே தோட்டத்துக்குள் வந்து குழாய்களைச் சேதப்படுத்துகிறது. ராஜபாளையம் மலை அடிவாரத்தில் வேட்டைத் தடுப்பு காவலா் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கரடி தாக்கியது.

இதனால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். எனவே, கரடிகள், யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com