பிளவக்கல் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!
தொடா் மழை காரணமாக, பிளவக்கல் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் சுற்று வட்டாரத்தில் 17 வருவாய்க் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி, 7,219 ஏக்கா் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் நேரடிப் பாசனம் மூலம் 960 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
47.56 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த வாரம் 17 அடியாக இருந்தது. அண்மையில் பெய்த மழை காரணமாக நீா் மட்டம் 18 அடியாக உயா்ந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஒரே நாளில் 6 அடி உயா்ந்து, அணை நீா்மட்டம் 24 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 200 கன அடிக்கும் மேல் நீா் வரத்து இருந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.