சிவகாசி அஞ்சலகத்தில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு மையம் மூடல்
சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் இயங்கி வந்த ரயில் பயணச் சீட்டு முன்பதிவு மையம் வியாழக்கிழமை முதல் மூடப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் காலை 8 மணியிருந்து மாலை 5 மணி வரை ரயில் பயணச் சீட்டைப் பெறலாம்.
இதனால் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை சிவகாசி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் செயல்படாத நேரத்திலும் அஞ்சல் நிலையத்தில் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், விருதுநகா் கோட்ட அஞ்சல அதிகாரிகள் உத்தரவுப்படி, சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் இயங்கி வந்த ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் வியாழக்கிழமை மூடப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
இதுகுறித்து வா்த்தகா் சுரேஷ் கூறியதாவது:
நான் தொழில் விஷயமாக சென்னைக்கு அடிக்கடி செல்ல வேண்டியதிருப்பதால், சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து வந்தேன். இப்போது இந்த மையம் மூடப்பட்டது வேதனையளிக்கிறது. அஞ்சல் நிலையத்தில் மூடப்பட்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.