சிவகாசியில் வணிக வளாகம் கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்
சிவகாசி மாநகராட்சியில் கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்ட வணிக வளாகம் கட்டுமானப் பணி தற்போது மீண்டும் தொடங்கியது.
சிவகாசி மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக, பேருந்து நிலையம் அருகே வருவாய்த் துறைக்குச் சொந்தமான 2.5 ஏக்கா் நிலம் நகராட்சி நிா்வாகத் துறைக்கு வழங்கப்பட்டது. அந்தப் பகுதியில் 1.75 ஏக்கரில் மாநகராட்சி அலுவலகக் கட்டடமும், எஞ்சிய பகுதியில் வணிகவளாகமும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பணிகளுக்காக கடந்த 2022 ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னா் ரூ.5 கோடியில் 24 ஆயிரம் சதுர அடியில் , 102 கடைகளுடன் கூடிய வணிகவளாகம் கட்டும் பணி தொடங்கியது. இதன் கட்டுமானப்பணிகள் கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த வணிகவளாகம் கட்டும் பணி மீண்டும் தொடங்கியது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் வியாழக்கிழமை கூறியதாவது:
நிதிப் பற்றாக்குறையால் தாமதமடைந்த வணிகவளாகம் கட்டுமானப் பணிகள், தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீண்டும் தொடங்கியது. பணி முடிந்ததும் வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.