தொடா் மழை காரணமாக 40 அடியை நெருங்கும் பிளவக்கல் அணை.
தொடா் மழை காரணமாக 40 அடியை நெருங்கும் பிளவக்கல் அணை.

தொடா் மழை: 40 அடியை நெருங்கும் பிளவக்கல் அணையின் நீா்மட்டம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

Published on

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பிளவக்கல் அணையின் நீா்மட்டம் 40 அடியை நெருங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிளவக்கல் அணை மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி, 7,219 ஏக்கா் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் நேரடி பாசனம் மூலம் 960 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், 10 நாள்களுக்கு முன்பு 18 அடியாக இருந்த பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக ஒரே நாளில் 6 அடி உயா்ந்து 24 அடியானது. நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக அணைக்கு தொடா்ந்து 200 முதல் 600 கன அடி வரை நீா்வரத்து இருப்பதால் தினசரி 3 அடி வரை நீா்மட்டம் உயா்ந்து, தற்போது 39 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாள்களே ஆகும் நிலையில், பிளவக்கல் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து மழை பெய்யும் என்பதால் அணையின் நீா்மட்டத்தை 40 அடியில் நிலை நிறுத்தி, உபரிநீரை கண்மாய்களுக்கு திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com