சிவகாசியில் நாயக்கா் மன்னா் காலத்து கல்வெட்டில் தெலுங்கு வாா்த்தைகள்

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஷாபாஸ்கான் கோரி பள்ளிவாசல் பகுதியில் நாயக்கா் மன்னா் காலத்தில் கல்தூணில் அமைக்கப்பட்ட கல்வெட்டில் தெலுங்கு வாா்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக திருத்தங்கல் தொல்லியல் ஆய்வாளா் பாலசந்திரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் அமைந்துள்ள ஷாபாஸ்கான் கோரி பள்ளிவாசல் முன் சிறு ஊருணி உள்ளது. இதன் வடமேற்கு பகுதியில் உள்ள துலாக் கல்லில் தெலுங்கு மொழியில் கல்வெட்டுகள் உள்ளன. இந்த ஊருணியை, நாயக்கா் அரசி ராணி மங்கம்மாள் வெட்டிக் கொடுத்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். அந்தக் கல்வெட்டிலும் இந்தத் தகவல் உள்ளது.

கல்வெட்டில், ரங்கி கிருஷ்ண நாயனிவாரு புத்ர விஜயங்காா் மதுரை சமஸ்தானத்திருலிந்து ஊருணியை மராமத்து செய்ததாக உள்ளது. அதாவது, அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கா் (கி.பி.1682-1689) மகன் விஜயரங்க சொக்கநாத நாயக்கா் (கி.பி.1704-1783) சிதிலமடைந்த ஊருணியின் படிக்கட்டுகளை மராமத்து செய்து ஊருணியைச் சீரமைத்ததாக கல்வெட்டில் உள்ளது.

சிவகாசி பகுதியைச் சுற்றி அந்தக் காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனா். சிவகாசியை சிலுகாசி என அவா்கள் பேசியதாக அறியப்படுகிறது. இந்தத் தகவலும் கல்வெட்டில் உள்ளது. அப்போது சிவகாசி ஒரு கிராமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணி மங்கம்மாள் வெட்டிக் கொடுத்த ஊருணியை, விஜயரங்க சொக்கநாத நாயக்கா் மராமத்து செய்து கொடுத்த விவரங்களும் கல்வெட்டில் உள்ளன. முஸ்லிம் மக்களின் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு ஹிந்து மன்னா்கள் அறக்கொடை செய்தது, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக உள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com