

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடா் மழையால் செண்பகத்தோப்பு மீன்வெட்டிப்பாறை அருவியில் நீா்வரத்து அதிகரித்தது.
விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் தேவியாறு, நகரியாறு, அய்யனாா் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, செண்பகத்தோப்பு பேயனாறு, அத்திகோயில் ஆறு, அா்ஜுனா நதி, தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீரோடைகள் உள்ளன. மேற்குத் தொடா்ச்சி மலையில் சாஸ்தா கோயில் அருவி, மீன்வெட்டிப்பாறை அருவி உள்ளிட்ட 13 அருவிகள், சாஸ்தா கோயில் அணை, பிளவக்கல் அணை ஆகியவை உள்ளன.
கடந்த 3 மாதங்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் கட்டாறுகள், ஓடைகள், அருவிகள் வடு காணப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடா் மழையால் கட்டாறுகளில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, செண்பகத்தோப்பு மீன்வெட்டிப்பாறை அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், பேயனாற்றில் நீா்வரத்து அதிகரித்து கண்மாய்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.