மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை
சாத்தூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மணியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மரியசெல்வம் (39). இவா், அதே பகுதியிலுள்ள கோல்வாா்பட்டி அணைக்கட்டு பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு இரவு நேரத்தில் டிராக்டரில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டபோது, அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் இவரைக் கைது செய்தனா்.
இதையடுத்து, இந்த வழக்கு சாத்தூா் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் சாா்பு நீதிமன்ற நீதிபதி முத்துமகாராஜன், மணல் திருட்டில் ஈடுபட்ட மரியசெல்வத்துக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.
மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டா், டிரைலரைக் கைப்பற்றி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து உரிய சட்டவிதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.
