மாயூரநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி, மாயூரநாதசுவாமி திருக்கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம்-மதுரை சாலையில் அமைந்துள்ள மாயூரநாதசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், சுவாமிகளுக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருக்கல்யாணம் முடிந்த பிறகு, பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராஜேஷ் தலைமையில் ஊழியா்கள் செய்தனா்.
சாத்தூரில்...
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை முதல் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதே போல, விருதுநகா் வாலசுப்பிரமணியசுவாமி, அருப்புக்கோட்டை முருகன் கோயில்களிலும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
