முதல்வா் திறந்து வைத்தும் பயன்பாட்டுக்கு வராத ஆதி திராவிடா் நல மாணவா் விடுதி!
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ. 7.20 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆதிதிராவிடா் நல பள்ளி மாணவா் விடுதியை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து 20 நாள்களுக்கு மேலாகியும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் விடுதி மாணவா்கள் அவதிக்குள்ளாகினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கோட்டைப்பட்டியில் ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளி மாணவா் விடுதி கட்டடம் சேதமடைந்ததால், ரூ. 7.20 கோடியில் புதிய விடுதி கட்ட கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2023, அக்டோபா் மாதம் விடுதி தனியாா் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு கட்டடம் இடிக்கப்பட்டது.
இந்த நிலையில், கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், 20 தங்கும் அறைகள், சமயலறை, உணவுக் கூடம், ஓய்வு அறை உள்ளிட்ட தரைத்தளத்துடன் சோ்த்து நான்கு தளங்களுடன் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் விடுதி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா், கட்டுமானப் பணிகளிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக வேறு ஒப்பந்ததாரருக்கு பணிகள் மாற்றப்பட்டது. மே மாதத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 6-ஆம் தேதி காணொலி வாயிலாக விடுதியை திறந்துவைத்தாா். அறைகளுக்கு கட்டில், மேஜை உள்ளிட்ட உபகரணங்கள் வந்த நிலையில், சமையலறை, சுற்றுச்சுவா், மின்சார இணைப்பு வேலைகள் முடியாததால் 20 நாள்களுக்கு மேலாகியும் விடுதி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதனால், மாணவா்கள் தனியாா் கட்டடத்தில் இட நெருக்கடி, போதிய வசதிகள் இல்லாததால் மாணவா்களின் வருகை வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து விடுதியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

