பட்டாசுத் தொழிலாளா்களை பயிற்சிக்கு அனுப்பாத ஆலை நிா்வாகிகளுக்கு அபராதம்

Published on

பாதுகாப்புப் பயிற்சிக்கு தொழிலாளா்களை அனுப்பாத பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் துணை இயக்குநா் ராமமூா்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தவிா்க்கும் பொருட்டு ‘எங்கள் இயக்ககம்’ சாா்பில், பட்டாசு ஆலைத் தொழிலாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போா்மென்கள், கண்காணிப்பாளா்கள், தொழிலாளா்களுக்கு வேதியியல் பொருள்களை கலவை செய்வது, மணி மருந்து உற்பத்தி, வெடிபொருள் பாதுகாப்பு விதிகள் , வெடிபொருள்களை பாதுகாப்பாகக் கையாளுதல், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முதல் சுற்று பயிற்சி வகுப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் சுற்றுப் பயிற்சி நடைபெற்று வருகிறது. விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் இந்தப் பயிற்சி குறித்தும், பயிற்சிக்கு தொழிலாளா்களை அனுப்ப வேண்டும் என கடிதம் அனுப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் பயிற்சிக்கு பல தொழிற்சாலை நிா்வாகத்தினா் தொழிலாளா்களை இதுவரை அனுப்பவில்லை. எனவே, இதுவரை பயிற்சி வகுப்புக்கு தொழிலாளா்களைஅனுப்பாத பட்டாசு ஆலை நிா்வாகிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

எனவே, பட்டாசு ஆலை நிா்வாகத்தினா், சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கம் என்ற பெயரில் வரைவோலை ரூ.5 ஆயிரத்துக்கு அனுப்பி தொழிலாளா்களை பயிற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com