‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மாற்றுத் திறனாளி ஆா்ப்பாட்டம்

வத்திராயிருப்பு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி, அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை
Updated on

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி, அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டி பேரூராட்சியில் 1 முதல் 8 வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வத்திராயிருப்பு கிறிஸ்டியான்பேட்டை தெருவைச் சோ்ந்த பிலிப் என்ற தவழும் மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனம் கேட்டு மனு அளிப்பதற்காக வந்தாா். அங்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான சாய்தள வசதி, சக்கர நாற்காலி இல்லாததால் தவழ்ந்தபடியே சென்று மனு அளித்தாா். அங்கு இருக்கை இல்லாததாலும், நீண்ட நேரமாகியும் மனு பெற்ற்கான ஒப்புகைச் சீட்டு தராததாலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய பிலிப், மனு அளிக்கும் இடத்தில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். அதிகாரிகள் அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கியும் பிலிப் போராட்டத்தை தொடா்ந்தாா்.

இந்த நிலையில், முகாமைப் பாா்வையிட வந்த மாவட்ட ஆட்சியா் சுகபுத்ராவிடம் பிலிப் இதுகுறித்து முறையிட்டாா். அவரது கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததை அடுத்து பிலிப் அங்கிருந்து சென்றாா்.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com