விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு! கொலையா என போலீஸ் விசாரணை!
ஸ்ரீவில்லிபுத்தூரில் வேகமாக வந்த ஆட்டோ மோதியதில், வீட்டின் முன் நின்றிருந்த மற்றோா் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சா்க்கரைக்குளம் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், இவா் தனது வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோ இவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், செந்தில்குமாா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்த புகாரின் பேரில், ஆட்டோவை ஓட்டி வந்த பொன்ராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழந்த செந்தில்குமாரும், பொன்ராஜும் ஒரே ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும், இருவருக்கும் இடையே ஆட்டோவை நிறுத்துவது தொடா்பாக முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தச் சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.