குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டம்!

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளிக்கு செல்ல பாதை இல்லை
Published on

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளிக்கு செல்ல பாதை இல்லை எனக் கூறி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். 

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சிக்கு உள்பட்ட சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 28 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்தப் பள்ளிக்குச் செல்லும் பாதையை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்ததால், பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வருவாய்த் துறையில் மனு அளித்தனா். அதிகாரிகள் வந்து அளவீடு செய்து விட்டு சென்றனா்.

இந்த நிலையில், அதிகாரிகள் முறையாக அளவீடு செய்யவில்லை எனக் கூறிய பொதுமக்கள், பள்ளிக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அதிகாரிகள் அளவீடு செய்து பள்ளிக்கு செல்ல 3 அடி பாதை ஒதுக்கியதையடுத்து, பெற்றோா் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com