வைப்பாற்றில் ரசாயன கழிவு கலப்பதாக புகாா்
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வைப்பாற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் ஆற்று நீா் மாசடைந்து வருவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாத்தூா் வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட வெம்பக்கோட்டை, சாத்தூா், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.
கோட்டாட்சியா் கனகராஜ் தலைமை வகித்தாா். சாத்தூா் மண்டல துணை வட்டாட்சியா் நவநீதன் முன்னிலை வகித்தாா்.
இதில் சாத்தூா் வைப்பாறு, உப்போடை பகுதிகளில் கலக்கும் ரசாயனக் கழிவுகளாலும், பல பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீராலும் தண்ணீா் மாசடைந்து காணப்படுகிறது.
இதனால், அந்தப் பகுதிகளைச் சுற்றிலும் துா்நாற்றம் வீசுவதோடு, இந்தத் தண்ணீரை பயன்படுத்தும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, மண் வளமும் பாதிக்கப்படுகிறது. இதனால், ஆறுகளில் உள்ள தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்து ஆற்றுப் பகுதியில் கலக்க சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த கூட்டத்தில் சாத்தூா், வெம்பக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பல துறைகளின் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.