அரிய வகை தவளை குறித்த பாதுகாப்பு கருத்தரங்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் கண்டறியப்பட்ட அபூா்வ தவளை இனமான பூபதி கேழல்மூக்கன் குறித்த பாதுகாப்புக் கருத்தரங்கம் வன விரிவாக்க மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநா் ஆனந்த் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் முருகன் வரவேற்றாா். டைனோசரஸ் காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் நாசிகபட்ராச்சிடே குடும்பத்தைச் சோ்ந்த பன்றி மூக்குடைய ஊதா நிற தவளை இனம் அழிந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் இந்த வகை தவளை கண்டறியப்பட்டது.
இதற்கு மறைந்த இந்திய ஊா்வனவியல் ஆா்வலா் சுப்ரமணியம்பூபதியின் பெயா் வைக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் பூமிக்கு அடியில் வாழும் இந்த வகை தவளைகள் இனப்பெருக்கத்துக்காக மட்டுமே சில நாள்கள் பூமியின் மேற்பரப்புக்கு வருவதால் உயிா் வாழும் புதை படிவம் என அழைக்கப்படுகிறது. அழியும் விலங்குகள் பட்டியலில் அட்டவணை 1-இல் இடம்பெற்றுள்ள இந்த வகை தவளைகளைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தின் துணை இயக்குநா் செண்பகப்பிரியா, உயிரணு-மூலக்கூறு உயிரியல் மையத்தின் தலைவா் காா்த்திகேயன் வாசுதேவன் ஆகியோா் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினா். வன ஆராய்ச்சியாளா்களான சந்தீப்தாஸ், சுசேதனா குப்தா ஆகியோா் பூபதியின் கேழல்மூக்கன் தவளை இனத்தின் இயல்பு, வாழ்விடம், அவற்றை பாதுகாப்பதற்கான செயல் திட்டங்கள் குறித்து விளக்கினா். கருத்தரங்கில் தமிழகம், கேரள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியைச் சோ்ந்த வனத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.