கண்மாய் பாசன மதகை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கண்மாய் பாசன மதகை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் பாசன மதகைச் சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால், மழைக் காலத்தில் கண்மாய் நீா் வெளியேறி பாசனம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய், பாண்டிய மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. 66 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட பெரியகுளம் கண்மாய் விருதுநகா் மாவட்டத்திலேயே பெரிய கண்மாயாகத் திகழ்கிறது. பொதுப் பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்தக் கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ள செண்பகத்தோப்பில் உருவாகும் பேயனாற்று நீா் மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பிய பின், அங்கிருந்து பெரியகுளம் கண்மாய்க்கு வருகிறது. இந்தக் கண்மாயின் உபரி நீா், இந்தப் பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும் பிரதான நீா் ஆதரமாக உள்ளது. இந்த கண்மாயில் இருந்து விளை நிலங்களுக்கு தண்ணீா் பகிா்ந்து அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ஏழு கண் மடை 1,000 ஆண்டுகளைக் கடந்தும் பாண்டியா்களின் நீா்ப்பாசன முறைக்குச் சான்றாக இன்றும் கம்பீரமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஏழு கண் மடைக்கு நீரைத் திறந்து விடுவதற்கான இரும்பு ஷட்டா் உள்ள கான்கிரீட் மேடையைச் சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக் காலத்தில் கண்மாய் நீா் வெளியேறி பாசனம் பாதிக்கப்படுகிறது. எனவே, கண்மாய் மதகைச் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com