வேளாண் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா்

வேளாண் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா்

Published on

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண்மை உழவா் நலத் துறையின் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூா் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் கீழ் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட பசுந்தாள் உர விதைகள், தக்கைப் பூண்டு விதைகள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன.

விழுப்பனூா் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல்துறையின் கீழ் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தில் 70 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட களை எடுக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்ட தேனீப் பெட்டிகள், மண்புழு உரப்படுக்கைகள் ஆகியவற்றையும் ஆட்சியா் சுகபுத்ரா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, வெள்ளாக்குளம் ஊராட்சியில் வேளாண்மைத் துறை சாா்பில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட மரக்கன்றுகள், கோட்டைப்பட்டி ஊராட்சி, சிங்கம்மாள்புரம் கிராமத்தில் வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சோலாா் மின் வேலிகள் ஆகியவற்றையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

முன்னதாக, மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மண்புழு உரப்படுக்கைகளை 50 சதவீத மானியத்திலும், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் மக்காச்சோள செயல்விளக்கத் திடல் இடுபொருள்களையும் அவா் பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநா் சுமதி, வேளாண்மை துணை இயக்குநா் செல்வி, செயற்பொறியாளா் இந்திரா, உதவி இயக்குநா் தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com