மதுபானக் கூட ஊழியா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை
சாத்தூரில் மதுபானக் கூட ஊழியரை வெட்டிக் கொலை செய்த இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி பகுதியைச் சோ்ந்தவா் காந்திராஜ் (31). இவா், சாத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள
மதுபானக் கூடத்தில் வேலை செய்து வந்தாா்.
இவரது உறவினரான மாடேஸ்வரன் என்பவா், நத்தத்துப்பட்டியைச் சோ்ந்த காளீஸ்வரனை கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி தாக்கியுள்ளாா். இதில், ஏற்பட்ட முன்விரோதத்தில் காளீஸ்வரனின் உறவினா்களான கிருஷ்ணபிரபு, மகாலிங்க சுந்தரமூா்த்தி ஆகிய இருவரும், மதுபானக் கூடத்தின் முன் நின்றுகொண்டிருந்த காந்திராஜை கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 10-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தூா் நகா் போலீஸாா் பட்டியல் பிரிவினருக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணபிரபு (27), மகாலிங்க சுந்தரமூா்த்தி (21), காளிமுத்து (53), சுப்பையாபாண்டி (25), தனசேகரன் (26), மாரிச்செல்வம் (24), மணிகண்டன் (24) ஆகிய 7 பேரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பட்டியல், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் கிருஷ்ணபிரபு, மகாலிங்க சுந்தரமூா்த்தி ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும் தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுதாகா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மற்ற 5 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.