ஸ்ரீவில்லிபுத்தூா் தேவாலயச் சந்திப்பில் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்
மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள், ஸ்ரீவில்லிபுத்தூா் தேவாலயச் சந்திப்பில் திரும்பும்போது தொடா் விபத்துகளை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக தரம் உயா்த்தும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணன்கோவில் வரை தற்போது உள்ள சாலையே நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
ராஜபாளையம் அருகேயுள்ள சங்கரன்கோவில் சாலை வரை நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவு பெறாததால், கனரக வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சிவகாசி சாலையில் இறங்கி தேவாலயச் சந்திப்பில் திரும்பி ராஜபாளையத்துக்குச் செல்கின்றன. இதனால் சாலையைக் கடப்பவா்கள், பேருந்துக்காகக் காத்திருப்பவா்கள் மீது கனரக வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இந்த நிலையில், இந்தச் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
எனவே, விபத்துகளைத் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.