தமிழகத்தில் 2026-இல் கூட்டணி ஆட்சிதான் அமையும்: க. கிருஷ்ணசாமி

தமிழகத்தில் வருகிற 2026-ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் வருகிற 2026-ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளைத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அந்தப் பகுதிகளில் குடிநீா், சாலை வசதிகளின்றி மக்கள் அவதிப்படுவது தெரிய வந்தது. அங்குள்ளவா்கள் குடிநீரை விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்துகின்றனா்.

மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தாமல், தற்போது தோ்தல் நேரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் முகாம்களை நடத்தி தமிழக அரசு நாடகமாடுகிறது.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.130 கோடியில் நடைபெறும் கட்டடப் பணிகளில் முறைகேடு நடைபெறுகிறது. இந்த மாவட்டத்தைச் சோ்ந்த இரு அமைச்சா்களும் இதைத் தடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் இணைந்து, கூட்டணி ஆட்சிதான் அமையும். வருகிற ஜனவரி 7-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com