அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9.40 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு
வத்திராயிருப்பில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9.40 லட்சம் மோசடி செய்த புகாரில் அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வத்திராயிருப்பு கீழத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜ் (48). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வத்திராயிருப்பு கிளையில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருடன் பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி பி.எஸ்.கே. நகரைச் சோ்ந்த சண்முகராஜ், தனது உறவினரான தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த சின்னப்பன் (எ) குமாருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகக் கூறிவுள்ளாா். இதை நம்பிய பாண்டியராஜ் தனது நண்பா், உறவினா்களுக்கு அரசு வேலைக்காக ரூ. 9.40 லட்சம் பெற்றுக் கொடுத்தாா்.
இந்த நிலையில், பணத்தைப் பெற்றுக் கொண்டவா்கள் வேலை பெற்றுத் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றிவுள்ளனா். இதுகுறித்து பாண்டியராஜ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி சண்முகராஜ், அவரது உறவினா்களான சின்னப்பன் (எ) குமாா், அவரது மனைவி ராசாத்தி ஆகியோா் மீது போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.