ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் காட்டுத்தீ
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு காட்டுத்தீ பற்றியது.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகத்துக்குள்பட்ட செண்பகத்தோப்பு வனப் பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளன.
செண்பகத்தோப்பு அடிவாரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அழகா்கோயில் பீட்டுக்குள்பட்ட மலைச் சரிவில் செவ்வாய்க்கிழமை மாலை காட்டுத்தீ பற்றியது. இரவில் காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகா் செல்லமணி தலைமையில், வனத் துறையினா், வேட்டைத் தடுப்பு காவலா்கள் என 20-க்கும் மேற்பட்டோா் தீயை கட்டுப்படுத்த வனப் பகுதிக்கு விரைந்தனா்.
இந்த நிலையில், அடா்ந்த மரங்கள், வன விலங்குகள் நிறைந்த பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் வன விலங்குகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக வன விலங்கு ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.