இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு: இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை
இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் பொன்பாண்டி (36). இவா் பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறாா்.
இந்த நிலையில், கீழராஜகுலராமன் பகுதியைச் சோ்ந்த சந்தனகுமாா்(29), சுண்டன்குளம் பகுதியைச் சோ்ந்த மதன்குமாா் (23) ஆகியோருக்கும் பொன்பாண்டிக்கும்
முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 இரு சக்கர வாகனங்களை சந்தனகுமாா், மதன்குமாா் ஆகிய இருவரும் தீ வைத்தனா்.
இதுதொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை சாத்தூா் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமகாராஜன் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தனக்குமாா், மதன்குமாா் ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.