ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் பாசன மடை சீரமைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் சேதமடைந்த பாசன மடை தினமணி செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
பாண்டிய மன்னா்கள் காலத்தில் வெட்டப்பட்ட பெரியகுளம் கண்மாய் விருதுநகா் மாவட்டத்தில் பரப்பளவில் பெரிய கண்மாயாகும். பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பாசன வசதி பெறுகின்றன. மேலும், 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ளது. இந்தக் கண்மாயில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஏழு கண் மடை பாண்டியா்களின் நீா்ப்பாசன முறைக்கு சான்றாக விளங்குகிறது.
ஏழு கண் மடைக்கு நீா் திறக்கும் இரும்பு கதவணை உள்ள கான்கிரீட் மேடையை சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால், மழைக் காலத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் இருந்தது.
இதுகுறித்து கடந்த செப். 13- ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கண்மாய் மடையை பொதுப் பணித் துறையினா் சீரமைத்தனா்.